சென்னை,, ஆக. 7--'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சாலை அமைப்பது குறித்து சதுப்பு நில ஆணையத்திடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, பள்ளிக்கரணை 'சதுப்பு நிலத்திற்குள், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 'இதற்காக அங்குள்ள நீர்நிலைகளில், டன் கணக்கில் கட்டுமான பொருட்கள், மண் கொட்டப்படுகின்றன. 'ராம்சார்' சதுப்பு நில பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இதனால் பாதிக்கப்படும்' என, செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்தது. இப்பிரச்னையில், முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம், சி.எம்.டி.ஏ., செங்கல்பட்டு கலெக்டர் ஆகியோருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இவ்வழக்கில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தில் சாலை அமைப்பது, மாநில சதுப்பு நில ஆணையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ராம்சார் சதுப்பு நில பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சதுப்பு நிலத்தில் சாலை அமைப்பது, சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பட்டா நிலமாக இருந்தாலும், சதுப்புநில பகுதியில் கட்டட அனுமதி அளிக்கும் முன்பு, சதுப்பு நில ஆணையத்திடம், சி.எம்.டி.ஏ., ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.எம்.டி.ஏ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 20ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.