உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சங்கர் ஜிவால் பெயரில் மிரட்டல் சைபர் போலீசார் விசாரணை

சங்கர் ஜிவால் பெயரில் மிரட்டல் சைபர் போலீசார் விசாரணை

சென்னை, தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் இ - மெயிலில், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சங்கர் ஜிவாலின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி., நகரிலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளிக்கு, நேற்று முன்தினம் இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் இது புரளி என தெரிந்தது. இதில், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து 'சைபர் கிரைம்' போலீசார் கூறியதாவது:தனியார் பள்ளிக்கு, சங்கர் ஜிவால் எழுதியது போல, மர்ம நபர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில்,'உங்கள் பள்ளியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் வெளியாகாமல் இருக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சமீபத்தில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய, தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் தொடர்பான தகவல்களை பரப்பி வருகிறார். உடனே பள்ளியை விட்டு வெளியேறுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கடிதம், முதல்வர் ஸ்டாலின் மற்றும் லண்டனில் உள்ள சில பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிக்க வைக்க கடிதம்

பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு, இரு நாட்களுக்கு முன், ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.சென்னை, செம்பியம் போலீசார் விசாரணையில், கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பெயரில் அக்கடிதம் வந்திருந்தது. சதீஷிடம் போலீசார் விசாரித்த போது, அவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுனர் என்பதும், கடிதத்தை அவர் அனுப்பவில்லை என்பதும் தெரிந்தது.இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் கூறியதாவது:செங்கல்பட்டைச் சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர், சில ஆண்டுகளுக்கு முன், கடலுார் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்தார். தற்போது, அவர் ஓய்வு பெற்றுள்ளார்.பணியின் போது, கடலுாரைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவரின் தனியார் நர்சரி பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில், அவருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதனால், ரோஸ் நிர்மலா மற்றும் படூரில் வசிக்கும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அருண்ராஜ் தொந்தரவு கொடுத்ததால், புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் அப்போது அவரை கைது செய்தனர். இவ்வழக்கில், தனியார் பள்ளி ஓட்டுனர் சதீஷ், ரோஸ் நிர்மலாவுக்கு ஆதரவாக சாட்சி கூறியுள்ளார். இதற்கு பழிவாங்க, சதீஷ் பெயரில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு அருண்ராஜ் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம்.அருண்ராஜை பிடிக்க, கேளம்பாக்கம் தனிப்படை போலீசார், நேற்று கடலுார் விரைந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை