தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், பொது சுகாதாரத் துறையின் கீழ், மூன்று நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.அனகாபுத்துார், பாரதிபுரம், குண்டுமேடு பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களில், தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறி நாய்க்கடி தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.கடந்த பிப்., 1 முதல் ஏப்., 30 வரை, 449 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 437 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும்.நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.inஎன்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் உரிமையாளர்கள், ஜூன், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அவ்வாறு வரும் விண்ணப்பங்களை, பொது சுகாதார பிரிவு கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மருத்துவர் குழு இணைந்து ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் உரிமச் சான்று வழங்கும்.இதன் வாயிலாக, மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.