| ADDED : ஜூன் 09, 2024 12:48 AM
திருமங்கலம்:வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால், பல்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கடும் அவதியடைக்கின்றனர்.அண்ணா நகரை அடுத்த, திருமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பராமரிப்பில், அரசு அலுவலர்களின் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் பல்வேறு 'பிளாக்'களில், 606 குடியிருப்புகள் உள்ளன. இதில், அரசு உயர் அலுவலர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், உயர்நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றுவோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த குடியிருப்பில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறையால அரசு ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, குடியியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது :ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் இக்குடியிருப்பில், தினமும் 4 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. தினமும், காலை, 6:00 - 8:00 மணி வரை மட்டுமே பம்புகளில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.தினமும் தண்ணீரை பிடித்து வைத்து தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், குடியிருப்போருக்கு குடிநீர் பற்றாக்குறையாக நீடிக்கிறது. லாரி வாயிலாக தொட்டியில் நிரப்படும் போது, இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போது, பம்புகள் வாயிலாக நேரடியாக குடிநீர் வாரியத்தில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கும் போது பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுகுறித்து, வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிநீர் வாரியத்திடம் பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுப்பது போல் தெரிவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.