உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் ஷெட்டாக மாறிய மெட்ரோ பார்க்கிங்: மாதக்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்

கார் ஷெட்டாக மாறிய மெட்ரோ பார்க்கிங்: மாதக்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்

சென்னை:சென்னையில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில், மாதக் கணக்கில் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியைக் காட்டி, அன்றாடம் வரும் பயணியருக்கு வாகனம் நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இடம் இல்லை

இதற்கேற்ப, சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 41 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்துவதற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 28 மெட்ரோ ரயில் நிலையங்களில் கார்களை நிறுத்தி செல்லும் வசதி இருக்கிறது.மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகன நிறுத்தங்களில் வாகனங்கள் நிரம்பி வருகின்றன. காலை 9:30 மணிக்கே பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தங்கள் நிரம்பி விடுகின்றன.அதன்பின் வரும் வாகனங்கள் இடம் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்படுகின்றன. திருமங்கலம், ஆலந்துார், சைதாப்பேட்டை, ஆயிரம்விளக்கு, மண்ணடி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிடங்களில், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் துாசு படியாமல் இருக்க, சொந்த வீடுகளில் நிறுத்தி வைத்திருப்பதை போல் கவர் போட்டு மூடி, மாதக்கணக்கில் நிறுத்தியுள்ளனர்.ஆனால், அன்றாடமும் வரும் மெட்ரோ ரயில் பயணியருக்கு இடமில்லை என, போர்டு வைத்து வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து, மெட்ரோ ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயில் வசதியாக இருக்கிறது. இதனால், வாகனங்களை பயன்படுத்துவோர் நெரிசலில் சிக்காமல் இருக்க, மெட்ரோ ரயிலை நாடுகின்றனர். ஆனால், வாகன நிறுத்தங்களில் இடம் கிடைப்பதில் தொடர்ந்து நெருக்கடி நிலவுகிறது.

சந்தேகம்

ஆலந்துார், சைதாப்பேட்டை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களில், எப்போதுமே வாகன நிறுத்துமிடங்கள் சில கார்களால் மாதக்கணக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போதிய அளவில் அன்றாட பயணியருக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களில் காலியாக உள்ள இடங்களை, பயணியர் அறிந்து கொள்ளும் வகையில் சி.எம்.ஆர்.எல்., செயலியில் வசதி இருக்கிறது. இதை பயன்படுத்தினால், பயணியர் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்.மெட்ரோ ரயில் பயணியர் அல்லாதவர்களின் கார்களுக்கு, வாகன நிறுத்துமிடங்களில் அனுமதி இல்லை. கார்கள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக பயணியர் கூறும் புகார்கள் குறித்து விசாரிக்கப்படும்.கிண்டி, திருமங்கலம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இடவசதி இல்லாத மெட்ரோ ரயில் நிலையங்களில், மல்டிலெவல் பார்க்கிங் அமைக்க உள்ளோம். கூடுதல் வாகன நிறுத்தும் வசதி கொண்டுவர, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் காலியாக உள்ள இடங்களையும் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ