| ADDED : ஜூலை 03, 2024 12:19 AM
அடையாறு, பாரிமுனையில் இருந்து நேற்று மதியம், தடம் எண் '102' மாநகர பேருந்து, சிறுசேரி நோக்கிச் சென்றது.ஓட்டுனர் சஞ்சய்குமார், நடத்துனர் குட்டியப்பன் பணியில் இருந்தனர். பேருந்திற்குள், 20க்கும் மேற்பட்ட பயணியர் இருந்த நிலையில், அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகில் சென்ற போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.சுதாரித்த ஓட்டுனர் சஞ்சய்குமார், பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணியரை இறக்கினார். அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்த பேருந்து, கொழுந்துவிட்டு எரிந்தது.இதனால், அடையாறு பகுதி முழுதும் புகை மூட்டமாக மாறியது.தகவலின்படி வந்த திருவான்மியூர், மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், பேருந்து முழுதுமாக எரிந்து, எலும்புக்கூடாக மாறியது.அடையாறு பணிமனை ஊழியர்கள் வந்து, எரிந்த பேருந்தை பணிமனைக்கு கொண்டு சென்றனர்.இதனால் அடையாறு, எல்.பி., சாலையில், இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதில், பயணியர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சாஸ்திரி நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இன்ஜினில் ஏற்பட்ட மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்தது தெரிந்தது.