| ADDED : ஜூலை 30, 2024 01:00 AM
சென்னை, 'கோவளம் அருகே கரிக்காட்டுக்குப்பத்தில் நடந்து வரும் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் பணிகள், சி.ஆர்.இசட்., விதிகளின் படி அனுமதி பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு: 'செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அருகே கரிக்காட்டுக்குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதால், மற்ற இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கரிக்காட்டுக்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் கடல் அரிப்பு தடுப்புச்சுவரை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு மீது, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கரிக்காட்டுக்குப்பத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டல- சி.ஆர்.இசட்., விதிகளின்படி அனுமதி பெற்று, கடல் அரிப்பு சுவர் கட்டப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதை தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் சரிபார்க்க வேண்டும்.சி.ஆர்.இசட்., அனுமதி பெறாமல் இருந்தால் கரிக்காட்டுக்குப்பத்தில் நடந்து வரும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், தமிழக அரசின் மீன்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.