கொரட்டூர்,கொரட்டூர் ஏரியில், 'பாடி' கிடப்பதாக நேற்று காலை, கொரட்டூர் மேம்பாலம் வழியே சென்ற ஒருவர், போலீசாருக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்து உள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த கொரட்டூர் போலீசார், ஏரியில் பார்த்த போது, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் ஏரியில் கிடப்பது தெரிந்தது.இதனால், வாகனத்துடன் ஓட்டுனரும் ஏரியில் விழுந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். உடனே, அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த தீயணைப்பு துறையினர், ஏரியில் இறங்கி தேடினர். அப்போது, டி.என்.02 ஏ.வி.1314 என்ற பதிவெண் கொண்ட, டாடா ஏஸ் சரக்கு வாகனத்தின் பின்பகுதி மட்டுமே, ஏரியில் கிடப்பது தெரிந்தது.இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மேம்பாலத்தில், பட்டரவாக்கம் கருக்கு பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற டாடா ஏஸ் சரக்கு வாகனத்தின் மீது, கார் ஒன்று மோதிஉள்ளது. இதில், சரக்கு வாகனத்தின் பின்பகுதி மட்டும் கழன்று, ஏரியில் விழுந்தது தெரிந்தது.இந்த விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தான் ஆசாமி ஒருவர், கவுண்டமணி - செந்தில் பட காமெடி பாணியில், ஏரியில், 'பாடி' கிடப்பதாகக் கூறி, போலீசாரை பரபரப்பாக்கியது தெரிந்தது.