ஆவடி, புழல், கன்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவன், 57. இவர், கடந்த 5ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: நான் அரிசி, பருப்பு மற்றும் ஆயில் உள்ளிட்ட மளிகை பொருட்கள், மொத்த விற்பனை செய்து வருகிறேன். எனக்கு, விருப்பாச்சி என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, விருப்பாச்சி மளிகை பொருட்கள் சப்ளை செய்வதாகக் கூறினார். இதற்காக 1.69 கோடி ரூபாய் கொடுத்தேன். ஆனால், பொருளும் வினியோகம் செய்யவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.இதுகுறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், திருவள்ளூர் மாவட்டம், ஒரக்காடைச் சேர்ந்த விருப்பாச்சி, 45, என்பவரை, நேற்று கைது செய்தனர். கொளத்துார் நபர்
பெரவள்ளூர், ஜவஹர் நகரில் ஷீன்லாக் பெயின்ட்ஸ் லி., நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் அரபிந்தோ, 41.கடந்த 2022ல், திருவள்ளூர், கொல்லமேடு பகுதியில் நிறுவனத்திற்கு புதிதாக 'ஷெட்' அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கான பணி, 'குட்வில் மெட்டல் ஸ்ட்ரக்சர்' நிறுவனத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ், 48, என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு வாயிலாக இரண்டு தவணைகளில் 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டார்.ஆனால், 'ஷெட்' பணியை முடிக்காமல், 1.10 கோடி ரூபாய் திருப்பி தராமல் ஏமாற்றியதாக, கடந்தாண்டு செப்., 23ம் தேதி, அரபிந்தோ, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கொளத்துார், கம்பர் நகரைச் சேர்ந்த ஜெய்கணேஷை நேற்று கைது செய்தனர்.