ராயபுரம்,சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், 81வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு, இளங்கலை மருத்துவ மாணவ - மாணவியரின் 245 பேருக்கு, பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.விழாவில் அவர் பேசியதாவது: ஸ்டான்லி மருத்துவ பள்ளியாக 1934 முதல் செயல்பட்டு, 1938ல் ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியாக அங்கீகாரம் பெற்று, 38 துறைகளுடன் இயங்கி வருகிறது. பத்மஸ்ரீ விருதுகள், பி.சி.ராய் விருது, பத்மவிபூஷன் விருதுகள் பெற்ற தலைசிறந்த மருத்துவர்கள் ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் படித்த மருத்துவர்கள். ஸ்டான்லி மருத்துவமனையில், 159 கோடி ரூபாயில், ஐந்து மருத்துவ கட்டடங்களும், 13 கோடி ரூபாயில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கூடிய செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடங்களும், 22 கோடி ரூபாயில் தரை மற்றும் ஆறு தளங்கள் கொண்ட மாணவியர் விடுதி கட்டடமும், 112 கோடி ரூபாயில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடங்களும், 12 கோடி ரூபாயில் அதிநவீன சமையல் கூடம் மற்றும் சலவையக கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.மேலும், எம்.பி., நிதியின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளி விழா கருத்தரங்கு கூடம் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. 50 லட்சம் ரூபாய் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான, இரண்டு மின்துாக்கிகள் அமைக்கப்படுவதற்கான பணிகளும் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி, எம்.எல்.ஏ.,க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.