அடையாறு, அடையாறு மண்டலம், 179வது வார்டு, பெசன்ட்நகர், அறுபடை முருகன் கோவில் அருகில் உள்ள கடற்கரையை ஆக்கிரமித்து, சாலை அமைத்து, பிளாட் போட்டு விற்பனை செய்தனர். கடந்த மாதம், மாநகராட்சி அதிகாரிகள், நேரடி ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றினர். மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் அமித், மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் இருக்க கண்காணிப்பு கேமரா போட முடிவு செய்தனர். இதற்கான பணி நேற்று துவங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி மட்டுமின்றி, அதைச் சுற்றி 1 கி.மீ., துாரம் பதிவாகும் வகையில், 12 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.அதேபோல், வேளச்சேரி, ரயில்வே சாலையில் சட்டவிரோதமாக மருத்துவம், கட்டட கழிவுகள் கொட்டுவதால், நீர்வழிபாதையில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள பாதிப்பு அபாயம் நிலவுகிறது.எனவே, கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், கொட்டும் வாகனங்களை பிடிக்கவும், 1.5 கி.மீ., துாரத்திற்கு 12 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. கேமரா பதிவுகளை கண்காணிக்கும் வகையில், அருகில் உள்ள வார்டு அலுவலகத்தில் மையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்து, மண்டல அதிகாரிகள், துணை கமிஷனர், கமிஷனர் ஆகியோர் நேரடியாக கண்காணிக்கும் வகையில் மொபைல் போனில் இணைப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இதன்வாயிலாக, கடற்கரை ஆக்கிரமிப்பை தடுப்பதுடன், வேளச்சேரியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.