உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் நிலம், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்து சோழவரத்தில் புது கட்டட பணிகள் வேகம்

கோவில் நிலம், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்து சோழவரத்தில் புது கட்டட பணிகள் வேகம்

சென்னை, கோவில் நிலம் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகியவற்றை, ஆக்கிரமித்து கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அகற்றாமல், வருவாய்த் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர்.சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், அருமந்தை ஊராட்சியில் உள்ள கூட்டுச்சாலை சந்திப்பில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகியவை, தனியாரின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. தற்போது புது கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் மற்றும் அருமந்தை ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, திருவள்ளூர் கலெக்டர் மற்றும் பொன்னேரி தாலுகா வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். இதன் எதிரொலியாக வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், ஆக்கிரமிப்பாளர் தரப்பில், கோவில் நிலத்திற்கான குத்தகை, அருமந்தை ஊராட்சிக்கு சொத்து வரி என, எதுவும் செலுத்தாமல் இருந்ததும், அந்த இடம் ஆக்கிரமிப்பு என்பதையும் உறுதி செய்தனர்.அதன்பின், அங்கு கட்டப்பட்டு வந்த புதிய கட்டடத்தை, கட்டடத்தின் உரிமையாளரே அகற்றிக்கொள்ள காலஅவகாசம் அளித்து, லோக்சபா தேர்தலுக்கு முன் எச்சரிக்கை 'நோட்டீஸ்' ஒட்டினர். ஆனால், அந்த நபர் நோட்டீசை கிழித்து அகற்றியதுடன், கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த் துறையினரை மிரட்டி, அனுப்பியதாக கூறப்படுகிறது.அதற்குள் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான நன்னடத்தை விதியும் நடைமுறைக்கு வந்தது. அதனால், வருவாய்த் துறையினர், ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை கைவிட்டனர்.அதற்குள் ஆக்கிரமிப்பு கட்டடம் கட்டும் பணி முழு வேகத்தில் முடிந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள், 6ம் தேதியுடன் முடிந்த நிலையில், அருமந்தை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள், வருவாய்த் துறையிடம் மீண்டும் புகார் அளித்தனர்.ஆனால், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், கிராம வாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை அதிரடியாக மீட்கும் ஹிந்து அறநிலையத் துறை, இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, நீர்வரத்து கால்வாய் மற்றும் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை