சென்னை, ஆதம்பாக்கம் மேம்பால ரயில் பாதைக்கு மேல், புதிய மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 116 கி.மீ., துாரத்திற்கு இயக்கப்பட உளளன. இதன் ஒரு பகுதியாக, ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக, சோழிங்கநல்லுார் - மாதவரம் மெட்ரோ தடம் அமைகிறது.இந்த தடத்தில் ஏற்கனவே மேம்பால ரயில் பாதையும் இருப்பதால், அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, ஆதம்பாக்கம் மேம்பால ரயில் பாதைக்கு மேல், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக, 20 மீட்டர் உயரமான பிரமாண்ட துாண்களும் அதில் பாலமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பயணியர் வந்து செல்ல வசதியாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் இணைக்கும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். மாதாவரம் - சிறுசேரி மெட்ரோ தடத்தில், மயிலாப்பூர், இந்திராநகர், திருவான்மியூர், தரமணியில் மெட்ரோ நிலையங்கள் அமைகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில் பரங்கிமலை, ஆதம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மெட்ரோ நிலையங்களில், பயணியர் வந்து செல்ல வசதியாக, எஸ்கலேட்டர்கள், நடை மேம்பாலங்களும் அமைக்கப்படும். இந்த தடத்தில் மொத்த பணிகளும் வரும் 2026ல் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.