சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி தடமும் ஒன்று. இதில், மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அருகே, இரட்டை சுரங்கப்பாதையில், பெரிய அளவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் பணிகள் துவங்கி, முழு வீச்சில் நடக்கின்றன.இந்த ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டு உள்ளன.அதேபோல், மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி வழித்தடத்தை பரந்துார் வரை நீட்டித்தும், கோயம்பேடில் இருந்து ஆவடி வரை நீட்டித்தும், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.இந்நிலையில், மீனம்பாக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்து வருகிறது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பூந்தமல்லியை குரோம்பேட்டை, குன்றத்துார் வழியாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.குன்றத்துார், திருநீர்மலை உள்ளிட்ட இடங்களில் நடக்கும் ஆய்வு முடித்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, பரந்துாரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியும்.மாதவரம் - - சிறுசேரி 'சிப்காட்' மற்றும் கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி ஆகிய இரண்டு வழித்தடங்களை இணைக்கும் விதமாக, திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.இங்கு, பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என நான்கு நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில், இந்த நிலையம் அமையவுள்ளது.இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி மிகவும் சவாலானது. இரண்டு வழித்தடம் கடக்கும்போது, இதன் ஆழம் 44 மீட்டர் வரை செல்லும்.நான்கு நிலைகளில் அமையவுள்ளதால், பல்வேறு இடங்களில் நகரும் படிக்கட்டுகள், மின் துாக்கிகள் அமைக்கப்படும். இந்த மெட்ரோ நிலையம் 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விம்கோ நகர் - வண்ணாரப்பேட்டை
மெட்ரோ ரயில் சேவை பாதிப்புவிம்கோ நகர் - வண்ணாரப்பேட்டை இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் வரை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில், விம்கோ நகர் - வண்ணாரப்பேட்டை இடையே, நேற்று காலை 10:00 மணிக்கு, மெட்ரோ ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில் சேவை தடைபட்டது. தகவலறிந்து வந்த மெட்ரோ ரயில் நிறுவன பொறியியல் பிரிவு அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், காலையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க வந்தோர், கடும் சிரமத்தை சந்தித்தனர். மெட்ரோ நிலையத்துக்கு தாமதமாக வந்த ரயில்களிலும், கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், கோளாறு சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு மேல், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மற்ற வழித்தடங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.