சென்னை, மத்திய சென்னைக்கு உட்பட ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பகுதி உள்ளது.இங்கு, 154 பாகத்திற்கான ஓட்டுச்சாவடி, பல ஆண்டுகளாக, அதேபகுதியில் உள்ள புலியூர் பிரதான சாலையில் இயங்கும் சென்னை துவக்க பள்ளியில் இருந்தது.தற்போது, லோக்சபா தேர்தலில், 154 பாகம் உட்பட சில ஓட்டுச்சாவடிகள், 1 கி.மீ., துாரத்தில் உள்ள சூளைமேடு, ஜெயகோபால் கரோடியா பள்ளிக்கு மாற்றப்பட்டது. இந்த தகவல், வாக்காளர்களுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை. இதனால், நேற்று காலை, வழக்கம் போல் பழைய இடத்திற்கு சென்ற வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதேபோல், முதியவர்கள் போதிய வாகன வசதிகள் இல்லாததால், ஓட்டளிக்காமல் வீடுகளுக்கு திரும்பினர். இதுகுறித்து, அப்பகுதி வாக்காளர்கள் கூறியதாவது:கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல், டிரஸ்ட்புரம் பள்ளியில் ஓட்டளிக்கிறேன். தற்போது, பூத் மாற்றிய தகவல் முறையாக தெரிவிக்கவில்லை.தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதேபோல், ஓட்டுச்சாவடி குறித்து தெரிவிக்க வேண்டும். முகவரி தெரியாமல், ஏராளமானோர் ஓட்டளிக்காமல் திரும்பினர்.கோடம்பாக்கத்தில் பூத் சிலிப் ஒருவருக்கு கூட வழங்கவில்லை. இதை முறையாக வழங்கி இருந்தால் கூட 'பூத்' மாறிய தகவல் தெரிந்திருக்கும். இதுபோன்ற காரணங்களால் மத்திய சென்னையில் ஓட்டு சதவீதம் நிச்சயம் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர். செங்குன்றம்
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மற்றும் புழல் ஒன்றியத்திற்குட்பட்ட, தீர்த்தகிரையம்பட்டு, புள்ளிலைன், வடகரை ஊராட்சிகளில், வாக்காளர்களுக்கு 'பூத்' சிலிப் சரியாக வழங்கப்படவில்லை.அதற்கான தேர்தல் பணியாளர்கள், பிரதான சாலையில் உள்ளவர்களுக்கும் மட்டும், பூத் சிலிப்பை வழங்கி, உட்புற பகுதிகளில் வசிப்போருக்கு வழங்காமல், அலட்சியம் காட்டி உள்ளனர்.அதனால், மேற்கண்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், தலா 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், எந்த ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிப்பது என்ற குழப்பத்தில் தவித்தனர்.முதியோர், மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணியர் உள்ளிட்ட பலரும், மேற்கண்ட பிரச்னையால் அவதிப்பட்டு, மாலை, 3:00 மணிக்கு பிறகே, மற்றவரது உதவியுடன், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர்.வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, அரசு, தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஆனால், அரசால் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் அலட்சியத்தால், வாக்காளர்கள் அவதிப்பட நேர்ந்து, ஓட்டுப்பதிவின் சதவீதமும் குறையும் நிலை உருவானது.
வாக்காளர்களுக்கு உதவிய
'ஓட்டர்' ெஹல்ப்லைன்'தேர்தலில் 'பூத் சிலிப்' இருந்தால், ஓட்டுச்சாவடி, வரிசை எண் ஆகியவற்றை எளிதாக கண்டறிந்து, உடனுக்குடன் ஓட்டுபோட வசதியாக இருக்கும். 'பூத் சிலிப்' இல்லை எனில், இதை கண்டுபிடிக்க அலைய வேண்டியிருக்கும். வாக்காளர்களும் குறித்த நேரத்தில், ஓட்டு போட முடியாது.இந்நிலையில், இதுபோன்ற குழப்பத்தை தவிர்க்க, வாக்காளர்களுக்கு 'ஓட்டர் ெஹல்ப்லைன்' செயலி பெரும் உதவியாக இருந்தது. மொபைல் போனில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், வாக்காளர் அடையாள அட்டையின் நம்பர், பெயர், தொகுதி ஆகியவற்றை குறிப்பிட்டால், ஓட்டு போடக்கூடிய இடம், ஓட்டுச்சாவடி, வரிசை எண் ஆகியவை வந்து விடும். அதை, ஓட்டுச் சாவடியில் காண்பித்து, ஓட்டு போடலாம். இந்த தேர்தலில், இந்த செயலியை பயன்படுத்தி, பெரும்பாலான வாக்காளர்கள், ஓட்டு போட்டனர்.