உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெட்ரோல் குண்டு வீசிய இருவர் சிறையில் அடைப்பு

பெட்ரோல் குண்டு வீசிய இருவர் சிறையில் அடைப்பு

டி.பி.,சத்திரம், ஜாமினில் வெளிவந்து முன்விரோதத்தில், போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய, இருவரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.சென்னை, டி.பி.,சத்திரம், ஜோதி அம்மாள் நகர் ஒன்பதாவது தெருவில், குடும்பத்துடன் வசிப்பவர் அமுதா, 30. அதே குடியிருப்பில் இவரது அக்கா அமலாவும் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது வீட்டின் அருகில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கஞ்சா புகைத்துள்ளனர். இதுகுறித்து, டி.பி.,சத்திரம் காவல் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார். இதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 24 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறையில் இருந்து கடந்த மாதம் 15ம் தேதி வெளியே வந்த சந்தோஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து, அமுதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, அமுதாவின் அக்கா கணவரான செந்தில்குமார் என்பவரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வழக்கில், மீண்டும் சந்தோஷ்குமார், கூட்டாளி மனோஜ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சந்தோஷ் கடந்த 8ம் தேதி, ஜாமினில் வெளிவந்து உள்ளார். கூட்டாளிகளுடன் சேர்ந்து, 9ம் தேதி நள்ளிரவு காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீயிட்டு, அமுதா வீட்டின் மீது வீசி விட்டு தப்பியுள்ளார். இதில், வீட்டின் தடுப்புச் சுவர் தீப்பிடித்து எரிந்தது. அமுதா மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்த வழக்கில், சந்தோஷ், 24, மற்றும் மனோஜ் 24, ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ