உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுப்பிரமணியனுடன் இணைந்து யு.ஏ.இ., அமைச்சர் ஜாக்கிங்

சுப்பிரமணியனுடன் இணைந்து யு.ஏ.இ., அமைச்சர் ஜாக்கிங்

சென்னை,அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, சென்னை பெசன்ட் நகரில், அமைச்சர் சுப்பிரமணியனுடன் இணைந்து, 'ஜாக்கிங்' மேற்கொண்டார்.தமிழகம் வந்துள்ள ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, சென்னையில் தொழில்துறை முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.தினமும் காலையில், 'ஜாக்கிங்' செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, சுற்றுப்பயணங்களின் போதும் அதைத் தொடர்வது வழக்கம். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனும், இதில் ஆர்வம் உடையவர் என்பதை அறிந்து, அவருடன் இணைந்து ஜாக்கிங் மேற்கொள்ள விரும்பினார். இதைத்தொடர்ந்து, பெசன்ட் நகரில் உள்ள, 8 கி.மீ.,'ஹெல்த் வாக்' நடைபயிற்சி மையத்தில், நேற்று காலை, சுப்பிரமணியன், அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மற்றும் அவருடன் வந்திருந்தவர்களும் ஜாக்கிங் சென்றனர். நடைபயிற்சி மையத்தை வியந்து பார்த்த அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, பல்வேறு இடங்களில் நின்று, அமைச்சர் சுப்பிரமணியனுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டார். இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஐக்கிய அரபு நாட்டு அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியுடன், 20க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களும் எங்களுடன், 'ஜாக்கிங்' வந்தனர். இடையில் கருப்பட்டி காப்பி அருந்தினோம். ஜப்பானின் டோக்கியாவில் உள்ள நடைபயிற்சி மையத்தைப் போல், இங்கும் அமைக்கப்பட்டுள்ளது குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், நடைபயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்பதை அவரிடம் தெரிவித்தேன். அவரது நாட்டில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றதையும் தெரிவித்தேன். தொடர்ந்து, 6 கி.மீ., ஜாக்கிங் சென்றோம். பின், தொழில்துறை அமைச்சர் ராஜா வந்து, இளநீர் வாங்கிக் கொடுத்தார்.இவ்வாறு அவர் கூறினார்.ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி கூறுகையில், ''வர்த்தக மேம்பாட்டு பணிகளுக்காக தமிழகம் வந்துள்ளேன். அமைச்சர் சுப்பிரமணியன், ஒரு சிறந்த ஓட்ட வீரர். அவருடன் இணைந்து, 'ஜாக்கிங்' மேற்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நடைபயிற்சி, உடல் நலத்திற்கு சிறந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை