திருவொற்றியூர், 'மாடுகளால் அசம்பாவிதம் நிகழ்ந்தால், உரிமையாளர் மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்படும்' என, கலந்தாய்வு கூட்டத்தில் சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில், மாடு வளர்ப்போர் மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் தனியரசு, நல அலுவலர் லீனா தலைமையில் நடைபெற்றது.இதில், திருவொற்றியூர் மண்டலத்தில், மாடு வளர்க்கும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும், குப்பை மேடாகி விட்டது. கட்டி வைக்கும் மாடுகள் மற்றும் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாடுகள் பிடிக்க அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இதன் காரணமாக, நின்று கொண்டிருக்கும் மாடுகளைக் கூட பிடித்து செல்கின்றனர். இதனால், எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கிறது.இவ்வாறு மாடுகளின் உரிமையாளர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து மண்டல நல அலுவலர் லீனா கூறியதாவது:திருவொற்றியூர் மண்டலம் முழுவதும் 440 பசுக்கள், 132 எருமை, 29 கன்றுக்குட்டி, 67 காளை என, 668 மாடுகள் உள்ளன. எம்.ஜி.ஆர்., நகர், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் உள்ள 150 ஏக்கர் நிலத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்லலாம். மாடு வளர்ப்போர், மாடுகளுக்கான சரியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.மாடுகளை, தண்டவாளம் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல கூடாது. மேய்ச்சலுக்காக சாலையில் அழைத்து செல்லும் போது, கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். மாடுகளால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால், உரிமையாளர் மீது, 15 நாட்கள் ஜாமீனில் வெளி வர முடியாத அளவில், வழக்கு பதியப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த கலந்தாய்வில், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் ராஜசிங், போக்குவரத்து காவல்துறையினர், மண்டல சுகாதார அலுவலர்கள் அன்பழகன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.