திருவொற்றியூர், மணலி மண்டலம், 16வது வார்டில், சடையங்குப்பம் - பர்மா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியின் வடக்கே, பூண்டி - கொசஸ்தலை ஆறு, கிழக்கே புழல் உபரி கால்வாய், பகிங்ஹாம் கால்வாய், தெற்கு பக்கம் புழல் உபரி கால்வாய் என, மூன்று புறமும் நீர்நிலைகள் சூழ்ந்து காணப்படுகின்றன.சென்னையின் நீர் ஆதாரங்களாக, புழல் மற்றும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால், கடைமடை பகுதியான பர்மா நகர் - சடையங்குப்பம் கடுமையாக பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த, 2015ல், 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறப்பால், ஊர் முழுதும் மூழ்கி போய் மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.வெள்ள காலங்களில், வருவாய் துறை சார்பில், படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவர். இந்த நிலையில், நிரந்தர தீர்வாக 2010ம் ஆண்டு, சடையங்குப்பம் ஊருக்குள் இருந்து, கிழக்கே புழல் உபரி கால்வாய், பகிங்ஹாம் கால்வாயை கடக்கும் விதமாக, 16 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள், 2015ம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின் வேகமெடுத்தன.பின், மணலி விரைவு சாலை - ஜோதி நகர் சந்திப்புடன் இணையும் மேம்பால வழித்தடங்களில் இருந்த கம்பெனிகளின் நீதிமன்ற வழக்குகளால், மீண்டும் பணி தொய்வடைந்தது.ஒரு வழியாக, 14 ஆண்டுகள் கழித்து மேம்பால பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், தெருவிளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பிற பணிகள் மேற்கொள்ளப்படவில்ல. இருப்பினும், மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்டு விட்டது.இரவு நேரத்தில், அந்த மேம்பாலம் வழியாக சடையங்குப்பம் செல்லும் மக்கள், இருட்டில் அபாயகரமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புண்டு. எனவே, மேம்பாலத்தில் குறை பணிகளையும் முடித்து, முறையாக மேம்பாலம் திறப்பு விழா கண்டால், பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் மேம்பாலத்தை பயன்படுத்த முடியும் என்பதே, நிதர்சனம்.