சென்னை, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் அடிப்படையில், சென்னையை அழகுபடுத்த, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையின் அழகை சீர்குலைக்கும் விதமாக பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.தொடர்ந்து, பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், மீறி ஒட்டுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களை கவரும் வகையில், தமிழக கலாச்சாரம், பண்பாடு, இயற்கை சார்ந்த ஓவியங்களை மேம்பாலங்கள், அரசு அலுவலகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வரைந்தனர்.ஆனால், ஆளும்கட்சி மட்டுமின்றி, கூட்டணி கட்சி என அனைத்து அரசியல்வாதிகளும், பொது இடங்களில் சென்னை அழகை சீர்குலைக்கும் விதமாக, சுவரொட்டிகளை தொடர்ந்து ஒட்டி வருகின்றனர்.குறிப்பாக, தேனாம்பேட்டை, அண்ணாசாலை அண்ணா அறிவாலயம் எதிரே, சாலை மைய தடுப்பில், தடுப்பே தெரியாத அளவிற்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.என்ன தான் அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் இருந்தாலும், தடையை மீறி சுவரொட்டிகளை ஒட்டும் அரசியல்வாதிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதற்கு காரணம், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம், இதுவரை எதுவும் இல்லை என்பது தான்.சென்னையில் பிரதான சாலைகள் மட்டுமின்றி, உட்புற சாலைகளிலும் கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, சுவரொட்டி ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.