திருமணம் செய்ய 50 சவரன் இன்ஸ்டா காதலன் கைது
சென்னை, திருமங்கலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 28 வயது இளம்பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகப்பேர் மேற்கு, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆதித்யன், 31, என்பவர், இன்ஸ்டாகிராம் வாயிலாக, என்னுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழகி வந்தார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறினார். இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம், எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஆதித்யன், தற்போது 50 சவரன் நகை வரதட்சணையாக கேட்கிறார். இது குறித்து எனது பெற்றோர், ஆதித்யன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்ட போது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ஆதித்யனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.