சென்னை, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த போயிங் மாடல் விமான போட்டியில், ஆதி திராவிடர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவியர், மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, தேசிய போயிங் விமான மாடல் போட்டி, சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த 4, 5ம் தேதிகளில் நடந்தது. கடந்த, 14 ஆண்டுகளாக இந்த போட்டிகள் நடக்கின்றன. இதில், பெரும்பாலும் ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவ - மாணவியரே பங்கேற்று வந்தனர். பள்ளி மாணவ - மாணவியரும் இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற முடியும் என்ற இலக்குடன், 360 டிகிரி பிளையிங் கிளப் என்ற நிறுவன தலைவர் சுரேஷ்குமார் முயற்சி மேற்கொண்டார்.அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆதி திராவிடர் அரசு பெண்கள் பள்ளிகளின் மாணவியருக்கு, போயிங் விமான வடிவமைப்பு குறித்து பயிற்சி அளித்தார். அதில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஐந்து மாணவியர் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். அனகாபுத்துார் ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளி, 10ம் வகுப்பு மாணவியர் ராஜேஸ்வரி மற்றும் சிவ ஆஷிகா, கன்னிகாபுரம் ஆதி திராவிடர் பெண்கள் பள்ளியின் பிளஸ் 1 மாணவி ரேஷ்மி, பாலவாக்கம் ஆதி திராவிடர் பெண்கள் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி பாத்திமா ஆகியோர் குழுவாக போட்டியில் களம் இறங்கினர்.கல்லுாரி மாணவர்களுடனான போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறிய மாணவியர், இறுதி போட்டியில் மூன்றாம் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, அரசு செயலர் லட்சுமிபிரியா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.போட்டி குறித்து, 360 பிளையிங் கிளப் நிறுவன தலைவர் சுரேஷ் கூறியதாவது:அதிகபட்ச எடையை தாங்கும் விமானம் என்ற தலைப்பில், போயிங் விமான மாடல் போட்டி நடந்தது. விமான பாகங்களின் எடையை விட, எந்த வகையான விமானம் அதிக எடையை சுமந்து செல்கிறது என்ற ஆராய்ச்சிக்காக, இந்த போட்டி நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற ஆதி திராவிட அரசு பள்ளி மாணவியர், தங்களின் புதுமையான தொழில்நுட்ப திறமையால், விமான வடிவமைப்பில் மூன்றாம் பரிசு வென்றுள்ளனர். ஐ.ஐ.டி., மாணவர்களுடன் போட்டியிட்டு அரசு ஆதி திராவிட பள்ளி மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளுக்கும், ஆதி திராவிடர் பள்ளிகளுக்கும், அங்கு படிப்பவர்களின் வளர்ச்சிக்கும், தமிழக அரசு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்துகிறது என்பதற்கு, இந்த மாணவியரின் சாதனையே எடுத்துக்காட்டு.இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தை
கற்றுக் கொண்டோம் கன்னிகாபுரம் ஆதி திராவிடர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவி ரேஷ்மி கூறுகையில்,''நான் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க விருப்பம் உள்ளது.. அதனால், மிகவும் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றேன்,'' என்றார். சிவாசிகா என்ற மாணவி கூறுகையில்,''ஏரோபிளேன் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு, ஏரோபிளேன் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொண்டேன்,'' என்றார். ராஜேஸ்வரி என்ற மாணவி கூறுகையில்,''ஏரோபிளேன் எப்படி செயல்படுகிறது என்ற தொழில்நுட்பத்தை, இந்த போட்டியின் வழியே கற்றுக்கொண்டோம். 360 டிகிரி பிளையிங் கிளப் சார்பில், எங்களுக்கு சிறந்த பயிற்சி அளித்தனர்,'' என்றார்.