பாரிமுனை: வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்டோர் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்த 2008ல், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இன்று வரை அமல்படுத்தவில்லை. சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு வழியே, மாற்றுத்திறனாளிகளை வைத்து நிரப்புவதாக, கடந்த 2023ல் முதல்வர் வாக்குறுதி அளித்தார். அதற்கான அரசாணை, 2023ல் வெளியிடப்பட்டது. ஆனால், சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில், ஏற்கனவே வெளியிட்ட இரண்டு அரசாணைகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஒரு அரசாணையை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், தற்காலிகமாக அரசு பணியில் இருப்போருக்கு, அவரது பணி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தி, மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் அய்யனார் கோரிக்கை மனுவை, தலைமைச் செயலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், மதுமதியிடம் அளித்தார்.