சென்னை : ''கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது,'' என, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் பழனிசாமி பேசினார். உலகின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, 250 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, 2011ம் ஆண்டை உலக கால்நடை ஆண்டாக அங்கீகரித்து, உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரியில், அறிவியல் கண்காட்சியை, கடந்த 29ந் தேதி முதல் ஆகஸ்ட் முதல் நாள் வரை நடத்தியது. இக்கண்காட்சியில், செல்லப் பிராணிகளின் அணிவகுப்பு, வண்ண வண்ண மீன்களின் கண்காட்சி நடந்தது. இதன் நிறைவு விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பாலசந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைவேந்தர் பிரபாகரன் தலைமை தாங்கி பேசிய போது, ''கால்நடை ஆண்டு விழாவை இவ்வளவு சிறப்பாக நடந்திய பெருமை மாணவர்களைச் சாரும்.
கண்காட்சிக்கு தேவையானவற்றை, உடனடியாக கொண்டு வந்து, மிக அழகாக காட்சிப்படுத்தியதில், அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு,'' என்று பாராட்டினார். கால்நடை பராமரிப்புத் துறையின் இயக்குனர் பழனிசாமி வாழ்த்திப் பேசும்போது,''கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற செல்லப் பிராணிகள், மீன்கள் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் என, 64 ஆயிரம் பேர் கலந்து கொண்டது மிகப்பெரிய சாதனை. சமீப காலமாக கால்நடை உயிர்களை மதிக்கின்ற போக்கு நம்மிடையே வளர்ந்து வருவதால், கால்நடை மருத்துவர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இங்கிருந்து மருத்துவராக உருவாகுகிறவர்கள், மனிதர்களைப் போலவே கால்நடை உயிர்களையும் மதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். பிற உயிர்களை மதிக்கிற மனப்பான்மை நமக்கு தொன்றுதொட்டு இருந்தாலும், கால்நடைகள் மீதான விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டி, வினாடி - வினா போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சமையல் போட்டியில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கும், மீன்வளத் துறையின் கமிஷனர் சந்திரகாந்த் பி.காம்ளே பரிசுகள் வழங்கி, பாராட்டிப் பேசும் போது, ''கால்நடைகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் அதிகரிக்க வேண்டும். அதை நோக்கமாகக் கொண்டு தான், மாணவர்களுக்கு இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்காகவே, பல்வேறு தனித்தனி கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. நன்னீர் மீன்களில், குட்டி போடும் மீன்களான பிளாட்டி, கப்பீஸ் மற்றும் மோலீஸ் மீன்களை, பலர் பார்த்திருக்க மாட்டார்கள். முட்டையிடும் மீன்களான டெட்ரா, பொன்மீன், கோய், கௌராமி, ஏஞ்சல் போன்ற பலவகை வண்ண மீன்களை காட்சிக்கு வைத்ததே, அது குறித்து மாணவர்களும், பொதுமக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்குத் தான்,'' என்றார். பால்வளத் துறையின் ஆணையர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்.மோகன், ராஜஸ்தான் மாநில கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அஜய்குமார் கோலட் ஆகியோரும் பேசினர். கால்நடை உற்பத்தி கல்வி மையத்தின் இயக்குனர் தியாகராஜன் நன்றி கூறினார்.