உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் தளவாட பொருட்கள் தட்டுப்பாடு : புதிய இணைப்பு வழங்குவதில் சிக்கல்

மின் தளவாட பொருட்கள் தட்டுப்பாடு : புதிய இணைப்பு வழங்குவதில் சிக்கல்

சென்னை புறநகரில் கடந்த பல மாதங்களாக, மின் தளவாடப் பொருட்களின் வழங்கல் முறையாக இல்லை. தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலக எல்லையில் மட்டும், 4,000 மீட்டர்கள், 100 டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மின்வழங்கலில் பாதிப்பு ஏற்படுவதோடு, புதிய இணைப்பு கிடைக்காமல் பொதுமக்களும் அதிருப்தியடைந்து வருகின்றனர். புறநகரில் கடந்த பல மாதங்களாக புதிய மீட்டர், டிரான்ஸ்பார்மர், கண்டக்டர், ஒயர் உள்ளிட்ட மின் தளவாட பொருட்களின் வழங்கல் வழங்கப்படவில்லை. இதனால், புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இணைப்பு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த மீட்டர்களையும் மாற்ற முடியவில்லை. டிரான்ஸ்பார்மர் வழங்கல் இல்லாததால், துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பழுதுகள், மின் ஒயர் மாற்றுவது உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தாம்பரம் செயற்பொறியாளர் எல்லைக்குட்பட்ட தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, கடப்பேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட, 25 உதவி பொறியாளர் அலுவலக பகுதிகளுக்கு, 4,000 புதிய மீட்டர்களும், 100 டிரான்ஸ்பார்மர்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதிகளில் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தவர்கள், பல மாதங்களாக, இணைப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். புதிய இணைப்பு கேட்டிருந்தவர்களும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இது குறித்து, பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மின்தளவாட பொருட்களின் வழங்கல், முறையாக இல்லாததால், பராமரிப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் பதில் கூற முடியாமல் தவிக்கிறோம். குறைந்தவிலையில் உள்ள சில பொருள்களை மட்டும் பணம் கொடுத்து, வெளியில் வாங்கி பொருத்தி நிலைமையை சமாளிக்கிறோம்'' என்றார்.

- கே. ஆறுமுகம் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ