உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழ் சமூகத்துக்கு மெக்கன்சியின் ஆவணங்களே சான்று

தமிழ் சமூகத்துக்கு மெக்கன்சியின் ஆவணங்களே சான்று

சென்னை : ''தமிழ் சமூக வரலாற்றை புரிந்து கொள்வதற்கு, மெக்கன்சியின் ஆவண தொகுப்புகளே பயன்படும்,'' என, சென்னை பல்கலையின் தமிழ் இலக்கியத் துறை பேராசிரியர் அரசு பேசினார்.சென்னை வார விழாவை முன்னிட்டு, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில், 'அரிய தமிழ் படைப்புகள்' கண்காட்சி மற்றும் சொற்பொழிவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, நூலகத்தின் இயக்குனர் சுந்தர் தலைமை வகித்தார்.இதில், பேராசிரியர் அரசு பேசியதாவது:மெக்கன்சி, 18ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கு வந்தார். திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டார். கிழக்கிந்திய கம்பெனியினர், கன்னியாகுமரி முதல் கிருஷ்ணா நதி வரை உள்ள நிலங்களை அளவிடுவதற்காக, மெக்கன்சியை நில அளவையாளராக நியமித்தனர். இவரின் தனிப்பட்ட ஆர்வத்தின் மூலம், தான் சென்ற எல்லா இடங்களிலும், பார்க்கும் பல நிகழ்வுகளை ஆவணப்படுத்தினார்.குறிப்பாக பழங்குடிகள், சமணர்கள், ஆதி திராவிடர்கள், தள புராணங்கள், வம்சா வழிகள் போன்றவற்றை, அவர்களின் வாழ்க்கை முறையில் அப்படியே பதிவு செய்தார்.படங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், தொல் பொருட்கள் என பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், உருது என, பல மொழிகளில் ஆவணப்படுத்தியிருக்கிறார். மெக்கன்சியின், ஆவணங்களில், தமிழ் மொழி பற்றி தான் அதிகம் உள்ளது.நாம் அனைவரும் 17,18,19ம் நூற்றாண்டுகளின் தமிழ் சமூக வரலாற்றை, புரிந்து கொள்வதற்கு மெக்கன்சியின் தொகுப்புகளே பயன்படும். தமிழ் மொழி 3,000 ஆண்டுகளுக்கும் மேலான, ஆவணங்களை கொண்டது. ஆனால், தற்போது இந்த ஆவணங்கள் அழியும் நிலையில் உள்ளது.பழைய கல்வெட்டுகளில், ஜாதி பற்றிய குறிப்புகள் இருந்தால், அதை புத்தகத்தில் அச்சிடக்கூடாது என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது, வருந்தத்தக்கது. ஆவணங்களில் உள்ள தகவல்களை பற்றி விமர்சனம் செய்யலாமே தவிர, அதை நீக்கக் கூடாது.தமிழகத்தில், சிறந்த நூலகங்களுள் ஒன்றாக, மறைமலை அடிகள் நூலகம் இருந்தது. பராமரிப்பில்லாமல், இவை பாழாகி வருகிறது. இதை பராமரிக்க அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு அரசு பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை