உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மிகுதி பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பதில் பிடிவாதம்

மிகுதி பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பதில் பிடிவாதம்

சென்னை : மாநகராட்சியில் உள்ள பணியிடங்களில், 4,500 மிகுதி பணியிடங்களை அரசிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டால், தங்களது வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற அச்சத்தில் மாநகராட்சி ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.மிகுதி பணியிடங்களாக மாநகராட்சி கருதுவதில், எது தேவை, எது தேவையில்லை என ஊழியர் சங்கங்களுடன் ஆலோசித்து, அதையொட்டி மிகுதி பணியிடங்களை அரசுக்கு ஒப்படைக்கலாம் என்ற தொழிற்சங்கங்களின் குரலுக்கு மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்காத நிலை நீடிக்கிறது.மாநகராட்சியில் உள்ள தொழிலாளர்கள் முதல் அலுவலர்கள் வரை 4,500 பணியிடங்களை மிகுதிப் பணியிடங்களாகக் கருதி, அரசிடம் ஒப்படைக்கும் முடிவை 2009 மே மாதம் மாநகராட்சி எடுத்தது. இதற்கு, ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.''மிகுதி பணியிடங்கள் என, மாநகராட்சி கணக்கிட்டுள்ள பல பணியிடங்கள் அவசியமானவை. அவற்றை மிகுதிப் பணியிடங்களாக கணக்கிட்டு, ஒப்படைக்கக் கூடாது. மேலும், சில பணியிடங்களை முற்றிலும் ஒழிப்பது போல, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால், மாநகராட்சி பணிகளை மேற்கொள்வதில் வெற்றிடம் ஏற்படும். மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. கூடுதல் பணிச் சுமை ஏற்படும்'' என ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்தன.நீதிமன்றத்தில் வழக்கு: ஊழியர் சங்கங்களின் கருத்தை ஏற்காமல், தன் முடிவின்படி, 4,500 பணியிடங்களை அரசுக்கு திரும்ப ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச., வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதனிடையே, பணியிடங்களை திரும்ப ஒப்படைத்து மாநகராட்சி அனுப்பிய கருத்துருவை, மேல் விவரங்கள் வேண்டும் என அரசு திருப்பி அனுப்பியது.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை, கூடுதல் விவரங்களை அரசுக்கு அளிக்க வேண்டும் என்ற நிலையில், 4,500 பணியிடங்களை அரசுக்கு திரும்ப ஒப்படைக்கும் முடிவை தற்போதைக்கு மாநகராட்சி ஒத்திவைத்துள்ளது.இது பற்றி தொழிற்சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தொழிற்சங்கங்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும் மாநகராட்சியின் முடிவில், ஊழியர்கள் திருப்தி அடையவில்லை.ஊழியர்கள் சிலர் இது பற்றி கூறும்போது, ''பணியிடங்களின் அவசியத்தை உணர்ந்து, திரும்ப ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி எடுக்க வேண்டும். பிடிவாதம் காட்டாமல், தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து, ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நடவடிக்கையை மாநகராட்சியிடம் எதிர்பார்க்கிறோம்'' என்கின்றனர்.மாநகராட்சியின் நிலை: இது குறித்து பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர், ''கடந்த காலங்களில் அனைத்து பணிகளையும் மாநகராட்சி நேரடியாக செய்து வந்தது. தற்போது குப்பைகளை அகற்றுதல், பார்க்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கணினிமயமாக்கப்பட்டதால், பதிவுகள் எளிதாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே, 4,500 பணியிடங்களை மிகை பணியிடங்களாக பட்டியிலிடப்பட்டுள்ளது'' என்றார்.மேலும், ''தமிழக அரசுக்கு மிகுதி பணியிடங்கள் குறித்து மாநகராட்சி அனுப்பிய கருத்துரு மீது மேல் விவரங்களை மட்டுமே அரசு கேட்டுள்ளது. எனவே, மிகுதி பணியிடங்களை, 'சரண்டர்' செய்யும் மாநகராட்சியின் முடிவுக்கு அரசு இசைவு தெரிவித்ததாகவே பொருள்படும். நீதிமன்றத்திலும் மாநகராட்சி தனது வாதத்தை பதிவு செய்து, இந்த முடிவை செயல்படுத்த முயற்சிக்கும்'' என்றார் அந்த அதிகாரி.மாநகராட்சியின் இந்த பிடிவாதம் காரணமாக, தற்போது குறிப்பிட்ட பதவிகளில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.எஸ்.திருநாவுக்கரசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை