அடையாறு : சாந்தோம் அருகே, ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்றொருவர் மருத்துவமனையில் பலியானார். காயமடைந்த இருவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.அடையாறு, மல்லிகைப்பூ நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 27; பூ வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, அதேப் பகுதியைச் சேர்ந்த, பூ வியாபாரிகளான செந்தில், 25, சரத், 21, ஆகியோருடன், வண்ணாரப்பேட்டையில் நடக்கவுள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக, மலர்களை எடுத்துக் கொண்டு, அருணாச்சலபுரம், முதல் தெருவைச் சேர்ந்த குமரன், 25, என்பவரின் ஆட்டோவில் புறப்பட்டனர்.சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, பாரிமுனையிலிருந்து, விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியுடன், ஆட்டோ, நேருக்கு நேர் மோதியது. இதில், பிரகாஷ் சம்பவ இடத்தில் பலியானார். மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில், ஆட்டோ டிரைவான குமரன், சிகிச்சைப் பலனின்றி இறந்தார். மற்ற இருவருக்கும், தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தியை, 27.போலீசார் கைது செய்தனர்.