உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமுறை மீறிய கட்சி கார்களை மடக்கி போலீசார் அதிரடி

விதிமுறை மீறிய கட்சி கார்களை மடக்கி போலீசார் அதிரடி

விதிமுறைகளை மீறி, பெயர்பலகைகளை வைத்து கொண்டு மாநகரில் வலம் வந்த அனைத்து கட்சி கார்களை, அதிரடியாக மடக்கி பிடித்த டிராபிக் போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தும், பெயர் பலகைகளை உடனடியாக மாற்றக் கோரியும் எச்சரித்து அனுப்பினர்.கடந்த 1ம் தேதி முதல் சென்னை மாநகர் முழுவதும் வாகனங்களில் பெயர்பலகைகளில் விதிமுறைகளை மீறி எழுதும் வாகனங்களை மடக்கும் டிராபிக் போலீசார், இ -சலான் முறையில் உடனடியாக அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக விதிமுறைகளை மீறிய, கட்சி கார்களும் மடக்கப்பட்டது.குறிப்பாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறடி சாலை உள்ளிட்ட அனைத்து சென்னையின் அனைத்து முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து போலீசார் துரித பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, கோயம்பேடு நூறடி சாலை காளியம்மன் கோவில் சாலை இணையும் சிக்னல் பகுதியில், டிராபிக் போலீசார் நேற்று கட்சி பாகுபாடு இன்றி விதிமுறைகளை மீறி பெயர்பலகை வைத்திருந்த அனைத்து கட்சி கார்களையும் மடக்கி பிடித்தனர்.குறிப்பாக ஆளும் அ.தி.மு.க., எதிர்கட்சியான தே.மு.தி.க., - தி.மு.க - கம்யூனிஸ்ட் என, விதிமுறைக்கு மாறாக எண்களை எழுதி வைத்துக் கொண்டு வந்த அனைத்து கட்சி கார்களையும் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.நெம்பர் பிளேட்டுகளில், வெள்ளை நிற பலகையில் கறுப்பு மை கொண்டு எழுதியிருக்க வேண்டும். ஆனால், கோல்டன் நிறத்தில் எண்கள் இருப்பது, பல நிறங்களில் எண்களை எழுதுவது, எண்களை மடக்கி எழுதுவது, ராசியான எண்ணை மட்டும் பெரிதாக எழுதி வைப்பது என பெயர்பலகையில் விதிமுறைகளை, பல வகைகளில் அவர்கள் மீறி இருந்தனர். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எந்த பாகுபாடும் பார்க்காத போலீசார், பெயர் பலகையில் எண்களை முறையாக எழுதாத அனைத்து கட்சிகாரர்களுக்கும் 50 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த குறைந்தபட்ச தொகைக்கும், சிலர் வாக்குவாதம் செய்தது பலிக்கவில்லை.மாற்றம் வருமா?முக்கிய கட்சியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், செயலர்கள் உள்ளிட்ட பலர் இது போன்று பெயர்பலகையில் கோல்டன் நிறத்தில் எழுதுவதை விரும்புகின்றனர். இது விதிமுறைக்கு மாறானது. இந்த நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக விதிமுறையை மீறும் இது போன்ற வி.ஐ.பி.,க்கள் கார்களை மடக்குவதற்கு முன்பு, அவர்களாக மாற்றினால் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.- எஸ்.விவேக் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை