ஆவடி:சாலையை சீரமைக்கக் கோரி, ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார்
மகளிர் கல்லூரி மாணவியர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து
பாதிப்பு ஏற்பட்டது.சென்னை ஆவடி அடுத்த, பருத்திப்பட்டு கிராமத்தில்,
தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு திருவேற்காடு,
ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, அம்பத்தூர் சுற்றுவட்டாரப்
பகுதிகளிலிருந்து, 1, 500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து
வருகின்றனர்.இவர்கள் பருத்திப்பட்டு பஸ் நிறுத்தத்திலிருந்து, கல்லூரிக்கு 2
கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த சாலை மரணப் பள்ளங்களுடன்,
போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலையின்
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த சாலையை
சீரமைக்கக் கோரி, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், ஆவடி மற்றும்
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தினரிடம் மனுக்கள் கொடுத்தும், இதுவரை
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எல்லைப் பிரச்னையால் சாலை சீரமைக்கப்படவில்லை
எனக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவியர் அதிருப்தியடைந்தனர்.நேற்று
காலை 9 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட மாணவியர் சாலையை சீரமைக்க கோரி,
பருத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது.காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மருத்துவமனை மற்றும்
திருவள்ளூரில் முதல்வர் கலந்து கொள்ளும் சிறப்பு திட்ட விழாவிற்கு
சென்றவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த ஆவடி உதவிக் கமிஷனர்
ஜான்ஜோசப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவியரிடம்
பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின்
அதிகாரிகள் வந்து, சாலையை சீரமைக்க உறுதி அளித்தால்தான் மறியலை கைவிட
முடியும் என மாணவியர் தெரிவித்தனர். போக்குவரத்து பாதிப்பு
அதிகரித்ததையடுத்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார்
மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, மாணவியரை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச்
செய்தனர்.