உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக்க. கோரிக்கை சென்ட்ரல் எழும்பூரில் நெரிசல் குறைவு

ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக்க. கோரிக்கை சென்ட்ரல் எழும்பூரில் நெரிசல் குறைவு

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை விட அதிகளவு இடத்தையும், சாலை உள்ளிட்ட மற்ற வசதிகளையும் பெற்று இருக்கும் ராயபுரம் ரயில் நிலையத்தை, மூன்றாவது முனையமாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தென்னகத்தின் முதல் ரயில் பயணம், 1856ல் ஜூன் மாதம் ராயபுரத்தில் இருந்து கிளம்பியது. அன்று முதல் 17 ஆண்டுகள் ராயபுரமே, சென்னையின் ஒரே ரயில் நிலையமாக செயல்பட்டு வந்தது. 1873ல் சென்ட்ரல் ரயில் நிலையம் துவக்கப்பட்ட பின், வடக்கே செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கே செல்லும் ரயில்கள் ராயபுரத்திலிருந்தும் பயணித்தன.இந்நிலையில், துறைமுகத்தால் ரயில் நிலையத்துக்கு சரக்கு வரத்து அதிகமானது. அதனால் தெற்கே செல்லும் ரயில்களுக்காக, 1907ல் எழும்பூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு ரயில்கள் ராயபுரத்தை விட்டு பிரிந்ததாலும், சரக்குப் பெட்டக முனையமாக கொருக்குப்பேட்டை உருவானதாலும் ராயபுரம் ரயில் நிலையம் பயனில்லாமல் போனது.அமைச்சரின் அறிவிப்பு காற்றோடு போச்சுமொத்தம் 72 ஏக்கர் இடவசதி கொண்ட ராயபுரம் ரயில் நிலையத்தின் சில பகுதிகள், 2006ல் சிமென்ட் மற்றும் உர கிடங்குகளுக்காக தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டது. இதனை கண்டித்து நடந்த போராட்டத்தின் விளைவாக, ராயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் பழுது பார்க்கும் பணிமனை அமைக்க, 2007ல் 15.5 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டது.அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, ''வடசென்னை வாசிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, வடக்கே செல்லும் ரயில்கள், ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்'' என அறிவித்தார். இந்த அறிவிப்பு, இன்றுவரை அறிவிப்பாகவே இருந்து வருகிறது.தாம்பரத்திற்கு மாற்ற திட்டம்?ராயபுரத்தில் ஏற்பட்ட நெரிசலை காரணம் காட்டி, எப்படி எழும்பூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டதோ, அதே போல் இப்போது எழும்பூர் ரயில் நிலைய நெரிசலை காரணம் காட்டி, மூன்றாவது முனையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மூன்றாவது முனையத்தை தாம்பரத்தில் அமைப்பது குறித்து ஆலோசனைகள் நடந்துள்ளன. ஆனால், இது குறித்து இறுதியான முடிவு எதையும் ரயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில், ராயபுரம் ரயில்நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதற்காக 'தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம்,' என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் நோக்கம் குறித்து விளக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளான டாக்டர்.ஜெயச்சந்திரன், போஸ், மாரிமுத்து ஆகியோர், '' ராயபுரத்தில் மூன்றாவது முனையத்தை உருவாக்கினால், தற்போது எழும்பூரிலிருந்து வடக்கே இயக்கப்படும் ரயில்களை ராயபுரத்திலிருந்து இயக்கலாம். இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் நெரிசல் குறையும். எழும்பூரிலிருந்து வடக்கே செல்லும் தாதர், கயா, கவுஹாத்தி, காக்கிநாடா உள்ளிட்ட ஏழு ரயில்கள் ராயபுரம் வழியாக தான் செல்கின்றன. அதனை ராயபுரத்திலிருந்தே இயக்கலாம்'' என்றனர்.நடைபயண போராட்டம்மேலும், ''சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் இடையே 1.5 கிலோ மீட்டர் தொலைவு தான். இரண்டுக்கும் தொடர்பே இல்லை. ஆனால், ராயபுரத்திலிருந்து சென்ட்ரலுக்கு 4.5 கிலோ மீட்டரும், எழும்பூருக்கு ஆறு கிலோ மீட்டரும் இடைவெளி கொண்டுள்ளது. இரண்டுக்கும் ராயபுரத்தில் இணைப்பு உள்ளது. ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றக்கோரி, வருகிற 22ந் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் நடை பயண போராட்டத்தை நடத்தவுள்ளோம். ராயபுரம் ரயில் முனையத்துக்கு தேவையான நிதியாக, ஒவ்வொரு தென்னக ரயில் பயணிகளிடமும் 100 ரூபாய் வசூலித்து ரயில்வே துறைக்கு தருவதெனவும் முடிவு எடுத்துள்ளோம்'' என்றனர்.எஸ்.சந்திரசேகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ