| ADDED : ஜன 31, 2024 12:33 AM
சென்னை, சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை சி.எம்.டி.ஏ., எல்லை வரை இயக்க அனுமதித்து, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒப்பந்த ஊர்திகள் என்ற அடிப்படையில், சென்னை நகர வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரின் ஒப்புதல் அவசியம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.சென்னை பெருநகரின் எல்லை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.இதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், சென்னை பெருநகர எல்லை பகுதிகளுக்குச் சென்றுவர தடையில்லை. எனவே, வரும் காலங்களில் சென்னை பெருநகர எல்லை பகுதிகளில் பயணிக்கும்படி அனுமதியளிப்பதாக குறிப்பிட்டு, ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். இதன் வாயிலாக வீடுகளுக்கோ, தொழில் ரீதியாகவோ சி.எம்.டி.ஏ.,-வால் வரையறுக்கப்பட்ட சென்னை பெருநகர எல்லைக்குள் ஆட்டோக்களால் தடையின்றி சென்று வர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவுக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச்செயலர் ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.