உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்குள் நுழைய பா.ஜ., நிர்வாகிக்கு கமிஷனர் விதித்த தடை உத்தரவு ரத்து

சென்னைக்குள் நுழைய பா.ஜ., நிர்வாகிக்கு கமிஷனர் விதித்த தடை உத்தரவு ரத்து

சென்னை, ஆக. 21- சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என, பா.ஜ., மாநில பட்டியலின அணி செயலர் சூர்யாவுக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பா.ஜ., மாநில பட்டியலின அணி செயலர் சூர்யா என்ற நெடுங்குன்றம் சூர்யா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி, சென்னைக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த ஏப்.7ல் கொளத்துார் காவல் துணை கமிஷனர் 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு சூர்யா பதில் அளித்த நிலையில், ஏப்., 25ம் தேதி முதல் ஓராண்டுக்கு, சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சூர்யா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சூர்யா தரப்பில், 'காவல்துறையின் நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தும் கூட, அதை பரிசீலிக்காமல் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மனுதாருக்கு எதிரான நோட்டீசில் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல், சென்னைக்குள் ஒரு ஆண்டுக்கு நுழையக்கூடாது என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி