சமையல் உதவியாளர் பணிக்கு 179 பேரை தேடுது மாநகராட்சி
சென்னை, மாநகராட்சி பள்ளிகளின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 179 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் நடைபெற உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், 179 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக, 3,000 ரூபாய்; காலமுறை ஊதியமாக, 9,000 ரூபாய் வரை வழங்கப்படும்.இப்பணிக்கு, 10ம் வகுப்பு தேறிய, தோல்வியடைந்த, 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்தவர்கள், பள்ளியை சுற்றி, 3 கி.மீ., க்குள் வசிக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன், 'கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை, சத்துணவுப்பிரிவு, அம்மா மாளிகை, சென்னை மாநகராட்சி - 600 003' என்ற முகவரிக்கு, இம்மாதம், 30ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும். அலுவலகத்தில் நேரடியாக கொடுப்பது, அதிகாரிகள் வாயிலாக கொடுப்பது போன்ற விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விபரங்களை, மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் 15 மண்டல அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். மேலும், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.