சென்னை: பல மாதங்களுக்கு முன், திருமணத்திற்காக சமூக நலக்கூடத்தை முன்பதிவு செய்த நிலையில், முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி திடீரென அனுப்பிய எஸ்.எம்.எஸ்., தகவலால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீர்வுகோரி கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில், மாநகராட்சி சமூக நலக்கூடம் உள்ளது. வரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, 38 பேர், இந்த சமூக நலக்கூடத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அழைப்பிதழ்களை அச்சடித்து, உறவினர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், முன்பதிவு செய்தோரின் மொபைல் போன் எண்களுக்கு நேற்று, 'சமூக நலக்கூட்டத்திற்கான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது' என, மாநகராட்சியில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் நேற்று காலை, மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்பதிவை எப்படி ரத்து செய்யலாம் என, கேள்வி எழுப்பினர். 'மண்டல அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட உள்ளோம். மண்டல அலுவலகம் தற்காலிகமாக, சமூக நலக்கூடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், முன்பதிவு ரத்து செய்யப்பட்டது' என, அதிகாரிகள் கூறினர். ஆனால், இதை அங்கு குவிந்தவர்கள் ஏற்கவில்லை. 'திருமண பத்திரிகை அடித்து எல்லாருக்கும் கொடுத்து வருகிறோம். 'திடீரென மண்டபம் தர முடியாது என்றால் எப்படி. நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். முன்பதிவு செய்த நிகழ்வுகள் முடிந்தபின், மண்டபத்தை அலுவலகமாக மாற்றுங்கள்' என, போர்க்கொடி உயர்த்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்கிறோம் என்று கூறி, அவர்களிடம் மனு வாங்கி, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சமூக நலக்கூடத்திற்கு இனி முன்பதிவு செய்ய முடியாத வகையில், 'பிளாக்' செய்துவிட்டோம். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், முன்பதிவை ரத்து செய்யக்கூடாது; அதேநாளில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்' என்றனர். மாநகராட்சியின் தவறுக்கு எங்களை பழிவாங்குவதா?
கோடம்பாக்கத்தை சேர்ந்த வி.இந்துமதி, 45, கூறியதாவது: என் தம்பிக்கு, வரும் ஜன., 28ல் திருமணம் நடக்க உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன், சமூக நலக்கூடத்தை முன்பதிவு செய்தோம். திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை கொடுத்தபின், திடீரென முன்பதிவு ரத்து என்றால் என்ன செய்வது. திருமண மண்டபத்தை திடீரென மாற்ற முடியாது; புதிய மண்டபமும் கிடைக்காது. மணமகள், மணமகன் ராசியில்லாததால் இப்படி தடங்கல் வந்து விட்டது என்பர். குடும்பத்தில் பல பிரச்னைகள் வரும். மண்டல அலுவலகத்தை மாற்றுவதாக இருந்தால், முன்கூட்டியே சமூக நலக்கூட முன்பதிவை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது மாநகராட்சியின் தவறு. திட்டமிட்டபடி திருமணம் நடத்த மாநகராட்சி உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.