பெருங்குடி குப்பை கிடங்கில் பல்லுயிர் பூங்கா திட்டம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கில் திட்டமிடப்பட்ட பல்லுயிர் பூங்கா, பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், 103வது வார்டு கவுன்சிலர் புஷ்பலதா பேசுகையில், ''அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சிலர், நீண்ட நேரம் அமர்ந்து கொள்கின்றனர். இதனால், இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதற்கு மேயர் பிரியா அளித்த பதிலில், ''பொதுமக்கள் பயன்படுத்த தான், இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். காவலாளி நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் நீண்ட நேரம் இருக்காத வகையில் சரிசெய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என்றார்.வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் பேசியதாவது:எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை ஐந்தாண்டில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை, ஓரிரு ஆண்டுகள் சேர்த்து வைத்து வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.சென்னையில், 595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஏற்கனவே, இதுபோல் வழங்கப்பட்டப்போது புகார் எழுந்தது.சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை தவறாக பயன்படுத்துகின்றனர். ஒரே குடும்பத்தில், 10 அடையாள அட்டை வரை வைத்துள்ளனர். அவர்கள், மற்றவர்களிடம் வாடகை அடிப்படையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இவற்றை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு முதலில் பதிலளித்த கமிஷனர் குமரகுருபரன், ''வார்டு மேம்பாட்டு நிதியை ஐந்தாண்டுக்குள் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து தெரிவிக்கப்படும்,'' என்றார்.பின், மேயர் பிரியா அளித்த பதில்:இதற்கு முன், மண்டல வாரியாக பூங்கா பராமரிப்பு விடப்பட்டிருந்தது. பின், ஏராளமான புகார்கள் வந்ததால், வட்டார அளவில், தனியாரிடம் பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தற்போது உங்களது கோரிக்கையை அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்.ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று நபர்கள் சாலையோர கடை நடத்துவதற்கான அடையாள அட்டை வைத்திருப்பது, போலி அடையாள அட்டை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும். மீண்டும் அவர்களுக்கு, சாலையோர வியாபாரத்திற்கான அடையாள அட்டை வழங்கப்படாது.அம்மா உணவகங்களில் ஏற்படும் புகார்களுக்கு தீர்வு காண, 'சிசிடிவி கேமரா' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சியில் உள்ள, 8,340 உட்புற மற்றும் பேருந்து தட சாலைகளில் உள்ள பெயர் பலகைகளை, 15 கோடி ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் முறையில் மாற்றி அமைக்க மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு பெயர் பலகைகளை, கவுன்சிலர்கள் அமைத்து கொள்கிறோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தால், அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பா.ஜ., கவுன்சிலர்
இனிப்பு வழங்கி கலகலப்புமஹராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், மாநகராட்சி கவுன்சில் கூட்டம் துவங்குவதற்கு முன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளுக்கானது எனக்கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் இனிப்பை எடுத்து, உமா ஆனந்தனுக்கும் ஊட்டினர்.இதை தொடர்ந்து, கவுன்சில் கூட்டத்தில், காங்., கவுன்சிலர் சாமுவேல் திரவியம், கேரள வயநாடு தொகுதி எம்.பி.,யாக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டதை பாராட்டி பேசினார். அப்போது, ''மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் வெற்றி குறித்து பேச, எனக்கும் வாய்ப்பு தர வேண்டும்,'' என்றார். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மரபை மீறிய கமிஷனர்?
மாநகராட்சி கவுன்சில் கூட்டம் காலை 10:00 மணிக்கு துவங்கும். ஆனால், நேற்றைய கூட்டம், 10 நிமிடம் தாமதமாக துவங்கியது. இதற்கு, கமிஷனர் வர தாமதம் ஏற்பட்டதால், மேயர் அவரது அறையிலேயே காத்திருந்ததாக கூறப்பட்டது. பின், மேயர் அவைக்கு வந்தப்பின், தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் கூட்டம் துவங்கியது. அப்போது, கமிஷனருக்கு பதிலாக, கூடுதல் கமிஷனர் ஜெயசந்திர பானு ரெட்டி இருந்தார். பின், கமிஷனர் வந்ததும், அவர் இறங்கி சென்றார்.மேயர் வருவதற்குள் கமிஷனர் அவைக்குள் வர வேண்டும்; மேயர் வரும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அந்த விதி நேற்று மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கமிஷனர் அலுவல் கூட்டத்தில் இருந்ததால் வர தாமதமானது. கமிஷனர் இல்லாத நேரங்களில், கூடுதல் கமிஷனர்கள் அவையில் இருக்கலாம். எனவே, அவை மரபு மீறப்படவில்லை என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருங்குடியில் பல்லுயிர் பூங்கா திட்டம் கைவிடுவதாக அறிவிப்பு
மாநகராட்சியில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதில் சில: மாநகராட்சி மருத்துவமனைகளில், அவசர காலங்களில் தனியார் டாக்டர்களை அழைத்து மதிப்பூதிய அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதற்கான மதிப்பூதிய தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாகவும், மயக்க மருந்து நிபுணர்களுக்கு, 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது மாதவரம் பகுதியில் உள்ள குமாரப்பாபுரம் முதன்மை சாலைக்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயர் மாற்றப்பட்டுள்ளது பெருங்குடி குப்பை கிடங்கில் பயோமைனிங் முறையில் மீட்டெடுக்கப்பட்ட இடத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில் பல்லுயிர் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. பூங்கா அமைப்பதற்கு கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சதுப்பு நிலப்பகுதியாக தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர். அதையேற்று, பல்லுயிர் பூங்கா திட்டத்தை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது மாநகராட்சியின் 245 பள்ளிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக 7.99 கோடி ரூபாய் செலவில், 980 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்த மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது அம்மா உணவகங்களுக்கு ேவையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை தொடர்ந்து, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க லிமிடெட் நிறுவனத்திடம் தொடர்ந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது கிழக்கு கடற்கரை ஆறு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக, பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்ப்பாக்கம் பகுதிகளில், 5 ஏக்கர் அரசு புறம்போக்கு, வாய்க்கால், குட்டை, கிராம நத்தம் வகைப்பாடு கொண்ட நிலத்தை, நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்ற தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.