உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் ஆவேசம்

ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் ஆவேசம்

ஆவடி, ஆவடி மாநகராட்சியின் புத்தாண்டின் முதல் மாமன்ற கூட்டம் நேற்று காலை 11.15 மணி அளவில், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடந்தது. துணை மாநகராட்சி கமிஷனர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது..மேகலா ஸ்ரீனிவாசன், காங்., 38 வது வார்டு: நாங்கள் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மாமன்ற கூட்டம் சரியாக நடப்பதில்லை. இதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. சுகாதார ஆய்வாளர் யார் என்பதை கூட்டத்தில் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. குப்பை பிரச்னைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் எங்களை கடிந்து பேசுகின்றனர். பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தால், குறித்து கொள்வதாக பதில் குறுஞ்செய்தி வருகிறதே தவிர, தீர்வு காண்பதில்லை.ஜான், மா.கம்யூ., 10 வது வார்டு: நான் கவுன்சிலராக பொறுப்பேற்றதில் இருந்து, எங்கள் வார்டில் ஒரு பிடி மண்ணை கூட மாநகராட்சி அதிகாரிகள் அள்ளி போடவில்லை. வடிகால் மூடி பல இடங்களில் உடைந்துள்ளது குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் புகார் அளிக்கிறேன். கூட்டம் முடிந்ததும் அதிகாரிகள் வருகின்றனர்; பார்க்கின்றனர்; சென்று விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது. அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்பதால், கவுன்சிலர்கள் அனைவரும் இணைந்து அதிகாரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் தான் நடத்த வேண்டும்.பிரகாஷ், அ.தி.மு.க., ஒன்றாவது வார்டு: கடந்த ஆண்டில் ஆறு முறை தான் மாமன்ற கூட்டம் நடந்தது. இப்படி கூட்டம் நடத்தாமல் இருந்தால், வார்டில் எப்படி வேலை நடக்கும். கூட்டம் நடந்தாலே, சரியாக பணிகள் நடப்பதில்லை. 'ஒய்யார கொண்டையாம், பிரிச்சு பாத்தா ஈறும் பேனுமாம்' என்பது போல, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கிறது. ஆறுமுகம், அ.தி.மு.க., 25 வது வார்டு: அண்ணனுார் 60 அடி சாலையில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. புதிதாக எல்.இ.டி., விளக்கு அமைத்தனர். அது சில நாட்களில் பழுதடைந்து விட்டது.தரமான விளக்குகளை பொருத்த ஏற்பாடு செய்யுங்கள். ஏற்கனவே உள்ள சேதமடைந்த வடிகாலை அகற்றாமல், அதன் அருகில் புதிதாக வடிகால் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.கூட்டம் முழுதும், அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் ஆவேசமாக புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ