சென்னை, இந்திய சென்கோன் இஷின் - ரியு கராத்தே கொபுடோ சங்கம் சார்பில், 14வது மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 'குமிட், கட்டா' பிரிவுகளில், தனி நபர் மற்றும் குழு அடிப்படையிலும், ஆயுதங்களை வைத்து விளையாடும் கொபுடோ பிரிவிலும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், 9 வயது முதல், 14 வயதுக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட செங்கை சிறுவர் - சிறுமியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.அனைத்து போட்டிகள் முடிவில், 'கட்டா' பிரிவில், விஸ்வஜித், கதிர் கண்ணன், அதிருத் மற்றும் தன்வந்த்; 'குமிட்' பிரிவில் சர்வேஷ் சூர்யா, கார்த்திக், சந்தோஷ், சத்யாநாராயணன்; 'கொபுடோ' பிரிவில் அஸ்வின் என, ஒன்பது சிறுவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும், மாநில அளவிலான போட்டியில் செங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும், 'சுயம்' அறக்கட்டளையின் தலைவரும், மத்திய அரசின் நேரு யுவகேந்திராவின் செங்கை மாவட்ட தலைவர் கண்ணபிரான், 191வது கவுன்சிலர் லக்ஷ்மி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.