| ADDED : பிப் 25, 2024 12:01 AM
காட்டுமன்னார்கோவில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னைக்கு தினமும் வினாடிக்கு 76 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.இந்தாண்டு பாசனத்திற்காக, மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. அங்கிருந்து ஜூன் 18ல் கீழணைக்கு வந்த தண்ணீர், வடவாறு வழியாக ஜூன் 24ல் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதனால் வீராணத்தின் நீர்மட்டம் உயர்ந்தது. சம்பா பருவத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. சென்னைக்கும் நீர்வரத்து இருந்தது.இந்நிலையில், கீழணை மற்றும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கீழணையில் தண்ணீர் வற்றியதால், வீராணத்திற்கு தண்ணீர் அனுப்புவது ஒரு மாதத்திற்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால், வீராணம் ஏரியின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது. தற்போது தரைமட்ட பகுதி தெரிய துவங்கியுள்ளது.நேற்றைய நிலவரப்படி, ஏரியில் வெறும் 26 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. இதனால், சென்னைக்கு நேற்று 16 கனஅடி மட்டுமே தண்ணீர் அனுப்பப்பட்டது.'ஏரியின் நீர்மட்டம் முற்றிலும் குறைந்துள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நாளையுடன் நிறுத்தப்படும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.