| ADDED : பிப் 06, 2024 12:25 AM
கோயம்பேடு, கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண்: '70' மாநகர பேருந்து, நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தது. சிவானந்தம் என்பவர், அப்பேருந்தை ஓட்டினார்.அப்போது, பின்னால் வந்த மற்றொரு பேருந்து ஓட்டுனர், வழிவிடுமாறு சத்தமாக கூறினார். அதற்கு சிவானந்தம், பேருந்துக்குள் வந்து பேசும்படி கூறியதாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த மற்றொரு பேருந்து ஓட்டுனர் புண்ணியமூர்த்தி, அவரது நடத்துனர் பாலகுமார் ஆகிய இருவரும், சிவானந்தம் ஓட்டிய பேருந்துக்குள் ஏறினர்.உடனே சிவானந்தம், பேருந்தின் கதவை மூடி, பேருந்தை நிறுத்தாமல் இயக்க ஆரம்பித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஆனது. பயணியர் முன் இந்த அடிதடி நடந்தது. பயணியர் தடுத்து விலக்கிவிடவே, பிரச்னை சமாதானமானது.கிளாம்பாக்கத்தில் அதிகப்படியான மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால், மற்ற வழித்தடங்களில் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், போதிய பேருந்துகள் கிடைக்காமல், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் பயணியர் வாக்குவாதம் செய்கின்றனர். இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தில், பேருந்து ஓட்டுனர்கள் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.