அரும்பாக்கம், பரதநாட்டிய ஆசிரியர் வீட்டில், 10 சவரன் நகை திருடிய மூதாட்டியை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.அரும்பாக்கம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் வசந்தா, 37; பரதநாட்டிய ஆசிரியை. இவர், தன் வீட்டில் பரதநாட்டிய வகுப்பு எடுத்து வருகிறார். கடந்த 21ம் தேதி, வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த நகைகளை சோதித்துள்ளார். அப்போது, 15 சவரன் நகைகளில், 10 சவரன் மாயமானது தெரிந்தது.இது குறித்து நேற்று முன்தினம், அரும்பாக்கம் போலீசில் வசந்தா புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன், அரும்பாக்கத்தைச் சேர்ந்த சாந்தி, 65, என்பவர், வசந்தா வீட்டில் பணிக்கு சேர்ந்துள்ளார். அப்போது, தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடியதை சாந்தி ஒப்புக் கொண்டார்.இதில், சிலவற்றை அடகு வைத்திருப்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் இருந்து, 4.5 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, மூதாட்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.