சென்னை, ''நவீன தொழில்நுட்பமும், டிஜிட்டல் துறைகளும் ஒட்டுமொத்த மக்களையும் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்,'' என தொழில்நுட்ப உச்சி மாநாட்டு நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார்.சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:கடந்த இரண்டு நாட்களில், 100 திறனாளர்கள், 1000 பங்கேற்பாளர்கள், 25 அமர்வுகள், 10,000 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாடு புதிய தொழில் முனைவோரை உருவாக்கும். உலக அளவிலான கண்டுபிடிப்புகளிலும் பங்கேற்கும் திறனை வளர்க்கும். இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.இந்தியாவில் இளைஞர்களின் மனிதவளம் அதிகம் உள்ளது. அடுத்த, 25 ஆண்டுகளில், 22 கோடி பேருக்கு கவர்ச்சிகரமான வருமானம் தரும் வேலை வாய்ப்பும் இந்திய இளைஞர்களுக்கு உள்ளது.நவீன தொழில்நுட்பமும், டிஜிட்டல் துறைகளும் ஒட்டுமொத்த மக்களையும் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் தியாகராஜன், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், டிஜிட்டல் சேவைகள் துறை செயலர் தீரஜ்குமார், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிண்டி, அம்பத்துாரில் தொழில் வளாகம்
தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், 188 கோடி ரூபாய் திட்ட செலவில், சென்னை கிண்டி, அம்பத்துாரில், அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, அம்பத்துார் தொழிற்பேட்டையில், தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.இவற்றை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குனர் மதுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் உதயநிதி பேசும்போது, ''முதல்வர் ஸ்டாலின், பெரிய தொழிற்சாலைகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறாரோ, அதை குறு, சிறு நிறுவனங்களுக்கும் அளிக்கிறார். தொழில் வளர்ச்சியில் தமிழகம், இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது' என்றார்.