உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை

 நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை

சென்னை: அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' நடத்திய, 'நாசா சர்வதேச விண்வெளி செயலிகள் சவால் -- 2025' போட்டி யில், சென்னை ராமா புரத்தை சேர்ந்த, ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் அணி, 'மிகவும் ஊக்கமளிக்கும் திட்டம்' என்ற விருதை பெற்று சாதனை படைத்துள்ளது. 'நாசா' சார்பில் நடத்தப்பட்ட உலகளாவிய ஹேக்கத்தான் போட்டியில், 167 நாடுகளைச் சேர்ந்த, 18,860 அணிகள் பங்கேற்றன. இதில், சென்னை ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லுாரியை சேர்ந்த, 'போட்டானிக்ஸ் ஒடிஸி' என்ற ஆறு மாணவர்கள் கொண்ட அணி, உலகின் முதல் 10 வெற்றியாளர்கள் அணியில் ஒன்றாக தேர்வாகி உள்ளது. இந்த அணியை, 14 சர்வதேச விண்வெளி நிறுவனங்களை சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய நிர்வாக குழு, வெற்றியாளர்களாக தேர்வு செய்தது. இந்த அணி, தொலைதுார கிராமப்புறம் மற்றும் மலைப் பகுதிகளில், அதிவேக இணைய இணைப்பை குறைந்த செலவில் விரிவுப்படுத்தும் நோக்கில், செயற்கைகோள் அடிப்படையில், 'ஆகாஷ்நெட்' என்ற திட்ட மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இத்திட்டத்திற்கு நாசா சார்பில், புதுமை மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வு என்ற, 'மிகவும் ஊக்கமளிக்கும் திட்டம்' என்ற விருது வழங்கப்பட்டது. இந்தியாவில், நாசாவின் கவுரவத்தை பெற்ற ஒரே அணியாக, ஈஸ்வரி பொறியில் கல்லுாரி மாணவர்கள் அணி திகழ்கிறது. பிரசாந்த் கோபால கிருஷ்ணன், ராஜலிங்கம், ராஷி மேனன், சக்தி சஞ்சீவ் குமார், தீரஜ் குமார், மனிஷ் வர்மா ஆகிய மாணவர்கள் குழுவாக இணைந்து, இந்த திட்ட மாதிரியை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை