உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

ராயபுரம், சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சவுந்தர், 32. இவரின் மனைவி சவுந்தர்யா, 26. ஜன., 4ல், இரண்டாவது பிரசவத்திற்காக, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில், சவுந்தர்யா அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 6 ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம், ஆண் குழந்தை பிறந்துள்ளது. சவுந்தர்யாவிற்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ரத்தப் போக்கு அதிகமானதால், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த சவுந்தர்யா, நேற்று காலை, 4:00 மணியளவில் உயிரிழந்தார். தகவலறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ராயபுரம் போலீசார், சமாதானம் பேசி, கலைந்து போக செய்தனர். சவுந்தர் அளித்த புகார்படி, ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு

சைதாப்பேட்டை தொகுதியில், சுய தொழில் துவங்கும் வகையில், 150 இளைஞர்களுக்கு மானிய விலையிலான ஆட்டோக்களை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின், 'ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ