பட்டினப்பாக்கம், மீன் அங்காடி கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு கடைகள் கிடைத்து மீன் வியாபாரம் செய்வது எப்போது என தெரியாமல், மீனவர்கள் கவலையில் உள்ளனர்.சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை முதல் கலங்கரை விளக்கம் லுாப் சாலை வரையில், ஏராளமான மீன் கடைகள் இருந்தன. சாலையை ஆக்கிரமித்து இந்த கடைகள் அமைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.விடுமுறை நாட்களில், மீன்கள் வாங்க பலர் கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, போக்குவரத்து போலீசாரும் கருதினர்.இந்நிலையில் கடந்தாண்டு துவக்கத்திலேயே, இந்த கடைகளை அகற்ற மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் செய்து, பலர் கைதாகினர்.மீன் கடைகள் அகற்றப்பட்டாலும், மீன் வியாபாரிகளுக்கு அதே பகுதியில் புதிதாக ஒரு நவீன மீன் அங்காடி அமைப்பதாகவும், அதில் வியாபாரம் செய்து கொள்ளலாம் எனவும், தமிழக அரசு உறுதி அளித்தது.இதனால், மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்தாண்டு துவக்கத்தில், பட்டினப்பாக்கம் பகுதியில், 10 கோடி ரூபாய் செலவில், நவீன மீன் அங்காடி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.மொத்தம் 336 கடைகள் அமையவுள்ள மீன் அங்காடியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, மீன்களை சுத்தப்படுத்தும் இடம் ஆகியவையும் அமைகின்றன.தற்போது, மீன் அங்காடியில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீன் கடைகள் அமைக்க ஆங்காங்கே, தடுப்புகளும் போடப்பட்டுள்ளன.ஆனால் இன்னும், மீன் அங்காடி கட்டுமான பணி முழுமை அடையவில்லை. இதனால், பட்டினப்பாக்கம் பகுதியில் மீண்டும் லுாப் சாலையோரம் சிலர் நாற்காலி அமைத்து, மீன் கடைகள் அமைத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.இதுகுறித்து, மீன் வியாபாரிகள் கூறியதாவது:மீன் அங்காடி கட்டுமான பணிகள் என்பது சில மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் ஆண்டு கணக்கில் மீன் அங்காடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் முழுமை அடையவில்லை. தொய்வுக்கு காரணம் தெரியவில்லை.கடைகள் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம்.இதனால் பலர் மீண்டும், சாலையோரத்தில் மீன் கடைகள் அமைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவர்கள் மீன் அங்காடி முழுதும் கட்டி முடிப்பது எப்போது? நாங்கள் அங்கு வியாபாரம் செய்வது எப்போது?இவ்வாறு அவர்கள் கூறினர்.