உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடி பணிப்பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடி பணிப்பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

சென்னை : நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் தங்க நாணயம் வாங்கி தருவதாக கூறி, 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வீட்டு பணிப்பெண் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜார்ஜ், 37. இவர், சென்னை காவல் துறை ஆயுதப்படையில், முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு முதல், நடிகர் சூர்யாவின் மெய்க்காவலராக பணியில் உள்ளார். அப்போது, சூர்யாவின் வீட்டில் பணிபுரியும் சுலோச்சனா, அவரது சகோதரி விஜயலட்சுமி ஆகியோர் அறிமுகமாகினர். சுலோச்சனா, தன் மகன்கள் பாலாஜி, பாஸ்கர் ஆகியோர், தங்க நாணய திட்டம் நடத்தி வருவதாகவும், சந்தை விலையை விட குறைந்த விலைக்கு தங்க நாணயம் வாங்கி தருவதாகவும், அந்தோணி ஜார்ஜிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதைய நம்பிய அந்தோணி ஜார்ஜ், கடந்த ஜனவரி மாதம், 1.92 லட்சம் ரூபாயை, பாலாஜியின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதற்கு, 30 கிராம் தங்க நாணயத்தை, பாலாஜி வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து, தன் தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்கு பெற்ற கடன் மற்றும் உறவினர்களிடம் வாங்கிய பணம் என, 46.87 லட்சம் ரூபாயை, பாலாஜி மற்றும் பாஸ்கரின் வங்கி கணக்கிற்கு, அந்தோணி ஜார்ஸ் அனுப்பியுள்ளார். ரொக்கமாக மேலும், 3.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், தங்க நாணயம் வாங்கிக்கொடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தோணி ஜார்ஜ், பணத்தை திருப்பி கேட்டபோது, 7.91 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளனர். மீதமுள்ள 42.45 லட்சம் ரூபாய் திருப்பி தரவில்லை. இது குறித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் அந்தோணி ஜார்ஜ் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட தி.நகர் தாமஸ் சாலையைச் சேர்ந்த சுலோச்சனா, 48, விஜயலட்சுமி, 38, பாலாஜி, 25, பாஸ்கர், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் மேலும் பலரிடம், 2.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !