| ADDED : மார் 20, 2024 12:17 AM
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் மேலாளராக பணிபுரிபவர் விஜயகணேஷ். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில், 'ஆவடியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வினோத் சர்மா, விவேக் சர்மா, சர்மிளா சர்மா, சப்னா சர்மா ஆகியோர் 'காமதேனு' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தனர். அவர்கள் போலியான சொத்து ஆவணங்களை சமர்ப்பித்து, தொழில் கடனாக 3.15 கோடி ரூபாய் பெற்றனர். ஆனால் திருப்பி செலுத்தவில்லை' என குறிப்பிடப்பட்டிருந்தது.போலீசாரின் விசாரணையில், வங்கியை ஏமாற்றும் நோக்கில், ஆவடி விளிஞ்சம்பாக்கத்தில் உள்ள 3,474 சதுரடி காலி நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது. மேலும், சொத்து தொடர்பாக, ஏற்கனவே பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதும், இதை மறைத்து தொழில் கடன் பெற்றதும் தெரியவந்தது.இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட, வினோத் சர்மா, 47, விவேக் சர்மா உட்பட நான்கு பேரையும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.