சென்னை: மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மற்றும் வடசென்னைக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக, கடந்த 2ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கனமழை பெய்தது. இதனால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக, வடசென்னையில் திருவொற்றியூர், சடையங்குப்பம், கார்கில் நகர், மணலி, மாத்துார், மஞ்சம்பாக்கம், மாதவரம், எண்ணுார், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வடசென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, திருநின்றவூர், புழல், காவாங்கரை, அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், வடகரை, விளாங்காடுபாக்கம், சோழவரம், பாடியநல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. குடியிருப்பு பகுதிகளில் மட்டுமின்றி, சிறுதொழில் நிறுவனங்கள் இயங்கும் பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள் ள பகுதிகளில் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். திருவள்ளூர் மற்றும் வடசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு மட்டும், அரசு சார்பில் நிவாரணம் அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு, அரசு ஆலோசித்து வருகிறது. ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது.