சென்னை, கிராம பொருளாதாரத்தை மீட்கும் வகையில், 'விக்கி' எனும், இந்திய பெண்களின் வர்த்தகம் மற்றும் தொழிலக சபை, சென்னையில் கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது.தேனாம்பேட்டை, ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில், 'விக்கி' எனும் இந்திய பெண்களின் வர்த்தகம் மற்றும் தொழிலக சபையின் சார்பில், கைத்தறி குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விற்பனை கண்காட்சி, 'சங்கமம்' என்ற பெயரில் நேற்று துவங்கி, இன்றும் நடக்கிறது.'விக்கி'யின் தேசிய தலைவர் சகினா அன்சாரி கூறியதாவது:கைத்தறி ஆடைகள், உடல் நலத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியவை. செயற்கை சாயமின்றி இயற்கையான செடி, கொடி, பூ, பழம், விதைகளில் இருந்தே, கைத்தறி ஆடைகளில் சாயம் போடப்படுகிறது. தனித்துவமான வேலைப்பாடுகளும் செய்யப்படுகின்றன.இதுபோன்ற பொருட்களுக்கு, வெளிநாடுகளில் நல்ல மதிப்பும், விலையும் கிடைக்கிறது. பருத்தி நுால் மட்டுமின்றி, பல்வேறு இயற்கை நுாலிழைகளில் துணிகள் உள்ளிட்டவற்றை உருவாக்க முடியும். அதுகுறித்து நெசவாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதும் அவசியம்.இச்சபையின் சார்பில், இதுபோன்ற உற்பத்திப் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதால், கிராமப்புற பொருளாதாரம் உயர்வதோடு, பெண்களின் வர்த்தக வாய்ப்பும் பெருகும். அதற்காகவே, இந்த சர்வதேச கருத்தரங்கம் நடக்கிறது. இதில், அசாம், மேற்கு வங்கம், ஜெய்ப்பூர், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரத்யேகமான கைத்தறி புடவைகள், ஆடைகள், புவிசார் குறியீடு பெற்ற கைவினைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.கருத்தரங்கத்துக்கு வந்துள்ள வல்லுனர்களை, இயற்கை சாயமேற்றும், அச்சிடப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்ட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.