பொது விருந்தில் அவமதிப்பு
பாடி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து நடந்தது. விருந்தை அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல் துவங்கி வைத்தார். முன்னதாக, பொது விருந்தில் மூதாட்டிகள் அமர வைக்கப்பட்டனர். இடையில், எம்.எல்.ஏ.,வுக்காக ஒரு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது. அப்போது, அதீத பசியில் வந்த நபர் ஒருவர், காலி நாற்காலியில் அமர்ந்தார். தி.மு.க.,வினர், அது எம்.எல்.ஏ.,க்கான இடம் என, அவரை விரட்டினர். ஆனால், அவர் எழும்ப மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த கோவில் ஊழியர்கள் சிலர், அவருடன் மல்லுகட்டினர். கூனிக்குறுகிய அந்நபர், நாற்காலியில் இருந்து எழுந்தார். அவரை சமாரியாக திட்டினர். இந்த விபரத்தை கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், பொதுவிருந்தில், தன் அருகில் அந்நபரை அமர வைத்து, உணவருந்தி, நிலைமையை சமாளித்தார்.